சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராக எழுதியதாக சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்தை பஷீர் மதிலுகள் என்ற பெயரில் கதையாக எழுதியிருந்தார்.
மதிலுகள் கதையை அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமாவாக எடுத்தார். பெண் கதாபாத்திரங்களே இல்லாத இந்தப் படம் மம்முட்டிக்கு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
ஆண்களுக்கான ஜெயிலில் இருக்கும் பஷீருக்கு பெண்கள் ஜெயிலில் கைதியாக இருக்கும் கல்யாணியுடன் நட்பு ஏற்படும். இரண்டுக்கும் நடுவில் பெரிய மதில் சுவர் இருப்பதால் பஷீரால் கல்யாணியை பார்க்க முடியாது, குரலை மட்டுமே கேட்க முடியும். மற்ற அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின் தனிமையில் இருக்கும் பஷீருக்கு கல்யாணியின் நட்பு புதிய வெளிச்சத்தை தரும். இறுதிவரை கல்யாணியை பார்க்க முடியாமலே ஜெயிலை விட்டு கிளம்புவார் பஷீர்.
இந்த மதிலுகள் கதையை அடிப்படையாக வைத்து மதிலுகளுக்கப்புறம் என்ற படத்தை அறிமுக இயக்குனர் பிரசாத் இயக்குகிறார். இது மதிலுகள் கதையின் தொடர்ச்சியாக இருக்கும்.
இந்தப் படத்தில் பஷீராக மம்முட்டியும், கல்யாணியாக நயன்தாராவும் நடிக்கின்றனர். மம்முட்டியின் ப்ளே ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. |