என் மகள் ஐஸ்வர்யா மதுவுக்கு அடிமையானவரா? அவதூறு பரப்புவர்களை கண்டித்த நடிகர் அர்ஜுன்..
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், திருமணத்திற்கு அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் கலந்து கொள்ளவில்லை. அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ளவில்லை என்பதால் பல யூகங்கள் சோசியல் மீடியாக்களில் வதந்திகள் பரவியது. இதுதொடர்பாகவும் தன் மகள் ஐஸ்வர்யா மீதான விமர்சனங்கள் குறித்தும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் அர்ஜுன்.

அர்ஜுன் அறிக்கை
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணமும் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. திருமணத்திற்கு ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதியும் அவரது குடும்பத்தினரும் வரவில்லை என்பதால் ஐஸ்வர்யா மீது பலரும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ஐஸ்வர்யா மதுவிற்கு அடிமையாகிவிட்டார் என்ற வதந்திகளும் இணையத்தில் பரவியதையடுத்து நடிகர் அர்ஜுன் நீண்ட அறிக்கை வெளியிட்டு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நன்றி
அதில், முதலில் அன்ஜனா திருமணத்தை முன்னிட்டு அவருக்கும், என் குடும்பத்தினருக்கும், தங்களின் அன்பையும் மனமார்த்த வாழ்த்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன். உங்கள் அன்பும், நல்வாழ்த்துக்களும் எங்களுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, எங்களை நினைத்து வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆனால், இதுபோன்ற ஒரு விஷயத்தை பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் எப்போதும் எதிர்பார்க்கவில்லை.
மகள் ஐஸ்வர்யா
தன்னுடைய வாழ்க்கையை தேர்வு செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டு. என்னுடைய இளைய மகளின் திருமணத்தின்போது, என் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல யூகங்கள், விவாதங்களில் எழுந்தது. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனி உரிமையை மதித்து, அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னுடைய வாழ்க்கையை தேர்வு செய்யும் உரிமையும், தனக்கு பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தன் தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார். ஆனால் ஒரு தந்தையாக என்னுடைய மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற, மிகவும் இழிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்படுவதை பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.

நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, யூகங்களும், விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதை புரிந்து கொண்டிருக்கிறோம், ஆனால் யூகங்களும் அடிப்படை ஆதாரமற்ற குற்ற்ச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது. பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமானாலும் கதைகளை புனைத்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கோ உரிமம் அளிப்பதல்ல. எவ்வித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது போன்ற ஆதாரமற்ற, இழிவான கருத்துகளை பகிர்வது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாதது.
சட்ட நடவடிக்கைகள்
அமைதி காப்பதே பல சமங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போதும் நம்பி வந்தோம். ஆனால் எங்களின் மெளனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாக கருதக்கூடாது. அதேபோல், தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்படுவதற்கும், பெரிதாக்கப்படுவதற்கும் எங்களின் அமைதி இடமளிக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகாரளித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பத்திரிக்கை துறையையும், செய்தி வெளியிடும் பணியையும் நான் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன், இருந்தாலும், உண்மை, நம்பகத்தன்மையை பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களது செய்திகளை பிரபலப்படுத்துவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் பரபரப்பாக்கும் சில ஊடகப்பிரிவுகள் தங்களின் பொறுப்பை தவறாகப் பயன்படுத்துவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஒரு தந்தையாக, என் மகளுக்கும், கண்ணியத்துடனும், சுதந்திரத்துடனும், சுயமரியாதையுடனும் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைக்கும் நான் எப்போதும் அவருக்கு துணையாக இருப்பேன். இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரப்பப்பட்டாலோ அல்லது மேலும் பெரிதாக்கப்பட்டாலோ, அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மரியாதையும் கண்ணியமும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடியவை அல்ல.
இது எனது மகளைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தேர்வுகள் பொதுவெளியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்த விஷயமாகும். குறிப்பாக, குடும்பத்தின் ஆதரவு இல்லாத பெண்களுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே கடினமான சூழ்நிலையில் இருக்கும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தை இது மேலும் சிக்கலாக்குகிறது. எந்தப் பெண்ணும் இதுபோன்ற சூழலைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. தனது வாழ்க்கையைத் தனக்குப் பிடித்தபடி வாழ்வதற்காக எந்தப் பெண்ணும் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கக்கூடாது நன்றிகள் என்று தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அர்ஜுன்.