வசிய மருந்தால் கர்ணாவை வசப்படுத்த திட்டமிடும் புவனா.. கர்வம் கொள்ளும் கர்ணா! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Sep 07, 2026 08:30 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த எபிசோடில் புவனா, கர்ணாவையும் தன்னையும் சேர்த்து வைப்பதாக கூறிய கிருபாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.

அதாவது, கர்ணாவும் இந்துவும் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருவதை நினைத்து வேதனைப்படும் புவனா, கிருபாவிடம், “ஆறு மாதத்தில் கர்ணாவை என்னுடன் சேர்த்து வைப்பதாக சொன்னீர்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அது முடியாது என்றால் சொல்லுங்கள், நான் உயிரை விடுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள்.

அதற்கு கிருபா, “நான் சொன்னது கண்டிப்பாக நடக்கும். கர்ணா உன்னுடன் சேர்வார்” என்று உறுதியளித்து புவனாவுக்கு வாக்கு கொடுக்கிறார்.

மறுபக்கம், இந்துவுக்காக கர்ணா ஆசையுடன் பூரி சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது இந்துவை பார்க்க வரும் பாலு, கர்ணாவின் இந்த பாசமான செயலை கண்டு மனம் மகிழ்கிறார். இந்துவும், “வாங்கப்பா, சாப்பிடலாம்” என்று அன்புடன் அழைக்க, கர்ணாவும் “வாங்க மாமா” என்று வரவேற்கிறார்.

கையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தவன் இன்று கையில் கரண்டியுடன் சமையல் செய்து கொண்டிருக்கும் கர்ணாவை பார்த்த பாலு, அவரின் மாற்றத்தை நினைத்து நெகிழ்கிறார். மேலும், “உங்களை இப்படி சந்தோஷமாக பார்த்ததே எனக்கு போதும். என் மனசு நிறைஞ்சுடுச்சு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இதற்கிடையில், தீனதயாளனை மருத்துவமனைக்கு அழைத்து வரும் இந்து, கர்ணா மற்றும் சித்ரா ஆகியோர் அங்கு பாஸ்கர் மற்றும் முத்தழகியை சந்திக்கின்றனர். அப்போது பாஸ்கர், ஒரு திறமையான மருத்துவர் குறித்து தகவல் கூறி, “அவரை சந்தித்தால் தீனதயாளனின் கால் நிச்சயமாக குணமாகும்” என்று நம்பிக்கை அளிக்கிறார்.

மற்றொரு புறம், கர்ணாவை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கும் புவனா, தனது தோழியுடன் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரியை சந்திக்கிறாள். அப்போது அவர் ஒரு மருந்தை கொடுத்து, “இதை யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்கள் 12 மணி நேரம் உன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்” என்று கூறுகிறார். இதனால் புவனா அடுத்ததாக என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

மேலும், தேர்தல் தொடர்பாக கர்ணா ஒரு யோசனையை கூற, திவாகரன் அதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டு கிண்டலாக பேசுகிறார். இதனால் கிருபா, “ஏன் இப்படிப் பேசுற? அவன் நம்ம தம்பிதானே” என்று திவாகரனை கண்டிக்கிறார். இதைக் கேட்டு கர்ணா திவாகரனை கோபமாக முறைக்கிறார்.

இப்படி விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த இந்தக் கதையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? கர்ணா மற்றும் இந்துவின் வாழ்க்கையில் புதிய சிக்கல் உருவாகுமா? என்பதை அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.