சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு!

Report
123Shares

வெற்றிடமாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியபோது,

“20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகின்றேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கின்றோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் சீர்பட்டுவிடும் என்று நம்புகின்றோம்.

தேர்தல்களை முறைகேடுகள் இல்லாமல் முறையாக நடத்துவதற்கான எல்லா பணிகளையும் எங்கள் கட்சி செய்து வருகின்றது. நாங்கள் பயணிக்கும் இடங்களில் சந்திக்கும் மக்களிடம் அந்த நம்பிக்கை தெரிகின்றது.

மேலும் மக்களிடம் நான் வாக்குறுதி பெற்று வருகிறேன். இனி வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற வாக்குறுதி தருகின்றார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றேன். ஆளவேண்டிய கட்சி மக்கள்தான். அவர்களுக்காக தான் நான் அரசியலுக்கே வந்துள்ளேன். அவர்கள் நன்றாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன்.

இந்தநிலையில் மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நம் நாட்டு அரசியலையே நாம் சரியாக செய்யவில்லை. பிற நாடுகளின் அரசியலில் நாம் தலையிட வேண்டியதில்லை. நான் யாருக்கும் குழலாகவோ ஊதுகுழலாகவோ இருக்கமாட்டேன்.

நாங்கள் மற்றவர்களை கடுமையாக விமர்சிக்கும் அரசியலை செய்ய வரவில்லை. நான் மக்களின் கருவி. எந்த கட்சிக்கும் கருவி கிடையாது. நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் இருக்கின்றது.

ஆனால் திட்டமிட்டதை விட வேகமாக பயணிக்கின்றோம். அடுத்தகட்ட பயணம் இன்னும் 2 நாட்களில் ஆரம்பிக்க இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

5092 total views