அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றார் ரஜினிகாந்த்

Report
47Shares

நேற்று இரவு 7.53 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த், கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்.

காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த் வேகமாக வீட்டுக்கு உள்ளே சென்றார். கருணாநிதியை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், பழைய கால நினைவுகளை கருணாநிதியிடம் நினைவுகூர்ந்தார். அதை சிரித்துக்கொண்டே கருணாநிதி கேட்டார். மேலும், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் கருணாநிதியிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. சந்திப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்தை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழி அனுப்பிவைத்தார்.

வெளியே வந்த ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, ‘கருணாநிதியிடம் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கூறி நலம் விசாரித்தேன். அதுக்கு பிறகு என்னுடைய அரசியல் பிரவேசத்தை பற்றி கூறி, அவரிடம் ஆசி வாங்கினேன்’ என்றார்.

அதைத் தொடர்ந்து இரவு 8.16 மணிக்கு ரஜினிகாந்த் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு, போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ரஜினிகாந்த் அங்கு நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவரிடம் அரசியலுக்கு வருவதாக சொன்னேன். அவர் சிரித்தார். அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன்” என்றார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் மு.க.ஸ்டாலினிடம் பேசினீர்களா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “இல்லை. இல்லை. கருணாநிதியை மட்டும் தான் சந்தித்து பேசினேன். கருணாநிதியை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. உற்சாகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்தை வழி அனுப்பி வைத்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்திக்க காரணம் என்ன?

பதில்:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்திப்பது புதிதல்ல. அரசியல் நாகரிகம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதி இன்முகத்தோடு அவரை சந்தித்து வாழ்த்தி இருக்கலாம். அதை தான் அவரும் சொல்லிவிட்டு சென்றார் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி:- கருணாநிதியை சந்தித்து ஆசி மட்டும் தான் ரஜினிகாந்த் பெற்றாரா? தி.மு.க.வின் ஆதரவையும் அவர் கேட்டாரா?

பதில்:- தி.மு.க.வின் ஆதரவை கேட்கிறாரா? கேட்கவில்லையா? அதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யவேண்டிய விஷயம். ஆகவே அவர் ஆன்மிக அரசியலை தான் நடத்தப்போகிறேன் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு, தங்களுடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் தெளிவாக சொல்கிறேன். இந்த மண் திராவிட இயக்கத்தினுடைய மண். தமிழகத்தினுடைய மண். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் பண்பட்டு இருக்கக்கூடிய மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார், யாரோ முயற்சித்து பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தோற்ற கதைகள் நாட்டிற்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது, நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க செல்கிறீர்கள். இது அரசியல் ரீதியான சந்திப்பா? அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா?

பதில்:- மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். அவர் (கருணாநிதி) என்னுடைய நீண்டகால நண்பர். அவரை பார்த்து, நலம் விசாரித்துவிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை சொல்ல இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதையடுத்து, கருணாநிதியை சந்திப்பதுபோல மற்ற கட்சி தலைவர்களையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவிக்காமல் ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

1593 total views