கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ள தேர்தல் வாக்குப்பதிவு

Report
10Shares

தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குறிப்பாக நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை கொண்ட நிஜாமாபாத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நிஜாமாபாத் தொகுதியில் இன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவு கின்னஸ் உலக சாதனையில் புத்தக்கத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

நிஜாமாபாத் தொகுதியில் இம்முறை 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆகவே இந்தத் தொகுதியில் ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு 12 வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே ஒதுக்க இயலும். இத்தொகுதியில் 1,788 வாக்குச் சாவடிகள் உள்ளதால் தேர்தல் ஆணையம் எம்-3 ரக புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஒரு கட்டுபாடு கருவியுடன் ஒன்று முதல் நான்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை பொருத்த முடியும். ஆனால் இந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கட்டுபாடு கருவியுடன் பொருத்தியுள்ளனர்.

மேலும் இந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளர்களின் பெயர்கள், ஒளிப்படங்கள் மற்றும் சின்னங்களை ஒரு பெரிய அறிவிப்பு பலகையாக எழுதி, மக்களுக்கு விளங்கும்படி வைத்துள்ளனர்.

இவற்றை எல்லாம் கடந்து இந்தத் தொகுதியில் மட்டும் 26 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியுள்ளது.

இம்முறையிலான வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறை. ஆகவே இந்த வாக்குப்பதிவு மிகவும் வித்தியாசமானது. அதை மனதில் கொண்டு கின்னஸ் உலக சாதனை அமைப்பின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை அமைப்பினர் ஆய்வு செய்து இத்தொகுதி தேர்தலை அங்கீகரித்தால் இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.

1007 total views