விஸ்வரூபம் பாடலால் விஸ்வரூபம் எடுத்த கூலி தொழிலாளி

Report
24Shares

கமலின் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற "உன்னை காணாத..." பாடல் மிகவும் பிரபலம். கமலும், ஷங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருந்தனர்.

இந்நிலையில், தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி ஒருவர், இந்தப்பாடலை மிக அழகாக, அசால்ட்டாக பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியன.

பாடகர் ஷங்கர் மகாதேவன், தனது டுவிட்டரில் அந்த வீடியோவை ரீ-டுவீட் செய்து, “உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த இளைஞர் பாடும் பாட்டு. யாராவது இவரை கண்டுபிடிக்க உதவுங்கள், இவருடன் இணைந்து பாட ஆசை" என கூறியிருந்தார்.

இதையடுத்து நெட்டிசன்கள் அவரை தேட தொடங்கினார். தற்போது அந்த இளைஞர் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி நூரநாடு என்பது தெரியவந்துள்ளது. அதோடு அவரின் மொபைல் நம்பரும் இணையதளங்களில் வெளியாக, அவரை ஏராளமான பேர் தொடர்பு கொண்டு பாராட்டி உள்ளனர்.

ஷங்கர் மகாதேவனும், ராகேஷை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனும், ராகேஷின் போன் நம்பரை தன் டுவிட்டரில் பதிவிட, அதைப்பார்த்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ், எனது அடுத்தப்படத்தில் ராகேஷை பாட வைக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் பட தலைப்பை போன்று ஓரிரு நாளிலேயே விஸ்வரூபம் எடுத்து உள்ளார் இந்த ராகேஷ் உன்னி.

1130 total views