காணாமல் போன வேல்... முருகன் வேடத்தில் பாவை! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.
இந்த சீரியலில் வீட்டில் காணாமல் போன வேல், அதனால் குடும்பத்துக்குள் வெடிக்கும் மோதல், இறுதியில் முருகன் வேடத்தில் பாவை என அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களால் அயலி தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
வீட்டில் இருந்த முக்கியமான வேல் திடீரென காணாமல் போக, குடும்பத்தினர் அனைவரும் பதற்றமடைகின்றனர். வேல் எங்கே போனது என்று தெரியாமல் வீடு முழுவதும் தேடத் தொடங்குகின்றனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் அனைவரிடமும் எழுகிறது.
இதற்கிடையில், சிவா வெளியில் சென்று விசாரிக்கும்போது, யாரோ தெரியாத நபர்கள் வேலை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இந்தச் சூழலில், அயலி மற்றும் சிவாவின் போனுக்கு வரும் ஒரு குறுஞ்செய்தி இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தி என்ன, அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
இதற்கிடையில் வீட்டிற்கு வரும் ரித்திகா, வேல் காணாமல் போனதற்கு வீட்டில் இருப்பவர்களே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். இதனால் ஜமுனா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்புகிறார். தங்கள் மீது தேவையில்லாமல் பழி சுமத்தப்படுவதாக அவர்கள் மறுப்பு தெரிவிக்க, வீட்டிற்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அனைவரின் சந்தேகமும் அயலி மீது திரும்புகிறது.

இதையடுத்து அயலியின் அறையையும் அவரது பேக்கையும் சோதனை செய்ய முடிவு செய்கின்றனர். அயலியும் சிவாவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் சோதனைக்கு சம்மதிக்கின்றனர். ஆனால், ரித்திகா தான் வைத்திருந்த பேக்கைச் சோதித்துப் பார்க்கும்போது, அதில் வேல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அப்படியென்றால் வேல் எங்கே போனது என்ற குழப்பம் அனைவரையும் ஆட்கொள்கிறது.
இறுதியில், வேல் காணாமல் போன மர்மத்திற்கு விடை கிடைக்குமா என்று அனைவரும் காத்திருக்கும் நேரத்தில், மாடியிலிருந்து சத்தம் கேட்கிறது. அங்கு சென்று பார்த்தால், முருகன் வேடமிட்டு கையில் வேலை ஏந்தியபடி பாவை நிற்கிறாள். அவளை ரவி புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
காணாமல் போன வேல் பாவையின் கைக்கு எப்படி வந்தது? அவள் முருகன் வேடமிட்டதன் பின்னணியில் என்ன காரணம்? ரவி எதற்காக அவளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த எபிசோடை எதிர்பார்க்கலாம்.
அயலி தொடரைத் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ZEE Tamizh தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்!