சூர்யகுமார் யாதவ் - பாகிஸ்தான் கேப்டன் கைக்குலுக்கல் சம்பவம்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...
சூர்யகுமார் யாதவ் - பாகிஸ்தான் கேப்டன்
2025 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்கியது. தொடர் தொடங்குவதற்கு முன், போட்டியில் பங்கேற்கும் அணியின் கேப்டன்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, இந்நிகழ்வில் இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்களின் செயல்பாடுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும் கேப்டன்கள் மேடையை விட்டு வெளியேறியபோது எடுக்கப்பட்ட சிறு வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கிக்கொள்ளாமல் சென்றனர்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ருதுராஜ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
பத்திரிக்கையாளர் ருதுராஜ்
அதில், அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் சுமூகமாகவே நடைபெற்றது. எந்தவிதமான விரோத்ப்போக்கும் அதில் இல்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தப்பின், கேப்டன்கள் மேடையில் இருந்து வெளியேறும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.
சூர்யகுமார் யாதவ், அறையின் பின்புறம் செல்ல முயன்றபோது, சல்மான் ஆகா அவருடன் கைக்குலுக்கினார். அது மிகவும் சுருக்கமான ஒரு சில நொடிகள் மட்டுமே நீடித்தது.
அது ஒரு சம்பிரதாயமான கைக்குலுக்கல் மட்டுமே, அவர்கள் நின்று நிதானமாக பேசிக்கொள்ளவில்லை. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் கேப்டன்கள் பேசிக்கொள்வது போல் நீண்ட உரையாடல் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் வரும் எதிர்வினைகளை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்.
வேறு என்ன நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்? சில நாட்களில் நீங்கள் விளையாடப்போகும் ஒரு வீரரை, அதுவும் எதிர் அணியின் கேப்டனை சந்திக்கும்போது அடிப்படை மரியாதையை வெளிப்படுத்துவது தான் விளையாட்டு தர்மம் என்று பத்திரிக்கையாளர் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.