என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமாகத்தான் இருக்கும்.. நடிகையுடனான நெருக்கமான காட்சி குறித்து பேசிய நடிகர் யாஷ்
கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் நடிப்பில் வருகிற 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தாலும், பல சர்ச்சைகளும் உள்ளன. காரணம், இப்படத்தின் டீசர், டிரைலர்களில் பெண்களை காட்டிய விதம் சர்ச்சையானது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யாஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்கும்போது தனது மனைவி ராதிகா எப்படி எடுத்துக்கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கை துணைக்கும் அந்த உணர்வு இருக்கும். ஆனால், இறுதியில் இவை எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன் மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது" என கூறினார்.
மேலும் பேசிய அவர், "மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசௌகரியமாகவே இருக்கும். அந்த காட்சிகளில் நடிப்பது எனக்கு எளிதல்ல. கதைக்கு அந்த காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது".

"அப்படியான காட்சிகளில் என்னை பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமாகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதை தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால், இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன வேலையை செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்" என கூறினார்.