பல வாய்ப்புகளை நிராகரித்தேன்..காரணம் இதுதான்!! எதிர்நீச்சல் நடிகை பார்வதி ஓபன் டாக்..
நடிகை பார்வதி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் நடிகை பார்வதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தொகுப்பாளராக இருந்தபோது, வந்த வாய்ப்புகளை தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும், தேவயானியுடன் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்புக்கு வேறு வழியில்லாமல் சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

என் ஆரம்பகாலத்தில் தொகுப்பாளராவேன் என்று நினைக்கவில்லை. நான் நடிகையாவேன் என்றும் நினைக்கவில்லை. தொகுப்பாளராக இருக்கும்போதே அதில் பெரிய நிகழ்ச்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் அனுபவம் குறைவாக கொண்டிருந்ததால் அதனை நிராகரித்து வந்தேன். எனக்குள் நம்பிக்கை வந்தப்பின் பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்படி ஒரு வாய்ப்புக்கு என்னால் மறுப்பு கூறவே முடியவில்லை. அதுதான் தேவயானியுடன் நடிக்கும் வாய்ப்பு.
ஒரு தொடரில் தேவையானிக்கு மருமகளாக நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் எனக்குள் பல கேள்விகள் இருந்தது. தேவயானி போன்ற பெரிய நடிகையுடன் திரையை பகிர்ந்து கொள்ள என்னைப் போன்ற புதுமுகத்தை யாராவது தேர்வு செய்வார்களா என்று பல கேள்விகள் எழுந்தது, ஆனால் நம்பவே முடியாத வகையில் அதிசயம் நடந்தது, ஆடிஷன் கூட போகாமல் நேரடியாக டெஸ்ட் சூட் சென்றோம்.

அப்படித்தான் புதுப்புது அர்த்தங்கள் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வாரத்திற்குப்பின் நான் இத்தொடரில் முதன்மை ரோலில் நடிக்கிறேன் என்பதே எனக்கு தெரியும்.
எதிர்நீச்சல் வாய்ப்பு
எதிர்நீச்சல் தொடரில் ஏதோ சிறிய ரோலுக்கு கேட்கிறார்கள் என்று நினைத்தேன், பின்புதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் எதிர்நீச்சலின் முதன்மை ரோலில் நடித்து வந்த மதுமிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

பிரமோவில் ஒரு முதன்மை ரோலை மாற்றும்போது பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆரம்பத்தில் இருந்த அந்த எதிர்ப்பு சிறிது காலத்திலேயே மாறியது. வலுவான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கியதால் பலரும் என்னை ஏற்றுக்கொண்டனர். எதிர்நீச்சல் தொடருக்குப்பின் ஜனனியாகவே என்னை பார்க்கிறார்கள். கதாபாத்திரமாகவே என் அம்மா என்னை நினைத்து அவ்வப்போது அழுகிறார்.
என்னைப் பார்க்கும் பலரும் ஜனனியாகவே நினைத்து என்னிடம் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ஏதோ உருப்படியாக வேலை செய்கிறேன் என்ற திருப்தி கிடைக்கிறது என்று பார்வதி தெரிவித்துள்ளார்.