கருப்பு படத்துக்கு பின்னால் இப்படியொரு உண்மை சம்பவமா!! யார் இந்த ஐகோர்ட் மகாராஜா..
கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கருப்பு. இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கருப்பு உலகளவில் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கருப்பு படத்தின் கதைக்கு பின் ஒரு உண்மையான நம்பிக்கை கதை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
படத்தின் கதை
படத்தில் கேரளாவில் இருந்து ஒரு தந்தை, அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள். அந்த இளம்பெண்ணுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதால் 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் வந்தவுடன் அந்த நகை திருடுபோயுள்ளது. பின் போலிசார் திருடர்களை பிடித்தாலும், முழு நகையை ஒப்படைக்காமல் அதில் ஒரு பகுதியை அதிகாரிகள் மறைத்து வைக்கிறார்கள்.
நீதிமன்றத்திற்கு சென்றாலும் அங்கேயும் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையே சிதறிப்போன நிலையில், கோர்ட்டில் இருக்கும் கருப்பசாமி முன் கதறி அழுகிறார்கள். அப்போது கருப்பசாமியே மனித உருவெடுத்து வழக்கறிஞராக வந்து நீதிக்காக போராடுகிறார். இதுவே கருப்பு படத்தின் மையக்கரு, ஆனால் இதேபோல் ஒரு நம்பிக்கை கதை தென் தமிழகத்தில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது ஐகோர்ட் மகராஜா கதை.

ஐகோர்ட் மகராஜா கதை
திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சுடலைமாடசாமியை குலதெய்வமாக பல குடும்பங்கள் வழிப்பட்டு வருகிறார்கள். பல தலைமுறைகள் கடந்து சொல்லப்படும் ஒரு நம்பிக்கை கதை என்னவென்றால், வெள்ளைக்கார ஆட்சிக்காலத்தில் சுடலைமாடசாமிக்கு பூஜை செய்து வந்த பூசாரி ஒருவர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவருக்காக வாதாட யாரும் இல்லை, ஆதாரமும் இல்லை.
நம்பிக்கை இழந்தவர் சுடலைமாடனை நினைத்து கதற, அந்த சமயத்தில் மர்மமான நபர் நீதிமன்றத்திற்கு வந்து, அந்த பூசாரி குற்றமற்றவர் என்று ஆதாரங்களை காட்டி சாட்சி சொன்னாராம். அதன்படி நீதிபதி பூசாரியை விடுதலை செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் தீர்ப்பு முடிந்ததும் அந்த நபர் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாராம். பின் அங்கிருந்தவர்கள் அது சாதாரண மனிதர் அல்ல, சுடலைமாடனே மனித உருவில் வந்து காப்பாறியதாக நம்பியதாக சொல்லப்படுகிறது. பின் அவருக்கு ஐகோர்ட் மகாராஜ் என்ற பெயர் வந்ததாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஐகோர்ட் மகாராஜா ஆலயத்தில் பலர் முடிவுக்கு வராமல் இருக்கும் வழக்குகள், குடும்ப பிரச்சனைகள், அடுத்தவர்களின் தொந்தரவுகள் என பல விஷயங்களையும் பேப்பரில் எழுதி ஐகோர்ட் மகாராஜா காலடியில் வைத்து வழிபடுகிறார்களாம், அப்படியே வழிபடும்போது அப்பிரச்சனைகள் தீர்வதாகவும் கூறுகிறார்கள்.
அப்படியானால் கருப்பு படத்தின் கரு இதில் இருந்துதானா? நேரடி உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாவிட்டாலும், நீதிக்காக கடவுள் மனித உருவம் எடுத்து வருவது, நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது, அநீதிக்கு எதிராக போராடுவதுமான அம்சங்கள் கருப்பு படத்துக்கும் ஐகோர்ட் மகராஜா நாட்டுப்புறக் கதைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.