ஷூட்டிங்கிலேயே மூக்கிலிருந்து வந்த ரத்தம்...கேரளாவின் கோலோச்சிய நடிகரின் துயரம்..
சத்யன்
தமிழில் எப்படி நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்று சொல்வார்களோ, அதேபோல்மலையாள சினிமாவின் நடிப்பு என்றால் அறியப்படுபவர்தான் நடிகர் சத்யன். இன்றுவரை அவரை கொண்டாடி வரும் மலையாள சினிமாவில் 20 ஆண்டுகள் கொடிக்கட்டி பறந்தவர் சத்யன்.
1952 முதல் 1971ல் வரை மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தார். நடிப்பை தாண்டி, நிஜ வாழ்க்கையில் ஆசிரியர், ராணுவ வீரர், இன்ஸ்பெக்டர் என் பல பணிகளை செய்து வந்தார் சத்யன். அதையெல்லாம் உதறிவிட்டு 39 வயதில் சினிமா பயணத்தில் நுழைந்தார்.

1971 அனுபவங்கள் பாலிச்சாக்கள் என்ற படம் தான் அவருக்கு கடைசி படம். அதில் மம்மூட்டி ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்தார். அப்படத்தின் ஷூட்டிங்கின் போது, மலையாள சினிமா எதிர்பார்க்காத துயரம் நடந்தது. இப்படம் தொடங்குவதற்கு முன் ஒராண்டுக்கு முன்பே, ரத்தப்புற்றுநோய் (லுகேமியா) பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் சத்யன்.
தனது நோய் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், அதே மிடுக்கு தோரணையுடன் தனியாக காரை ஓட்டிக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவது வழக்கம்.
மூக்கிலிருந்து வந்த ரத்தம்
அனுபவங்கள் பாலிச்சாக்கள் ஷூட்டிங்கில் மரத்தடியில் கதாநாயகி ஷீலா மடியில் படுத்தபடி காதல்காட்சி படமாக்கப்பட்டது. அக்காட்சி முடிந்தபோது ஷீலாவின் உடையில் ரத்தக்கறை. அது, சத்யன் மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்.

அந்நாள் வரை அரசல் புரலாக அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததை அறிந்திருந்த படக்குழுவுக்கு அன்று ரத்தம் வடிந்ததை பார்த்ததும் பதறிப்போனார்கள்.
ஆனால் சற்றும் பதறாத சத்யன், ஒரு துணையை எடுத்துவரச்சொல்லி தனது மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டதோடு, உடையில் ரத்தக்கறை படிந்ததற்காக நடிகை ஷீலாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அதே ராணுவமிடுக்குடன் தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவரை பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போதே நினைவு தவறியிருக்கிறது. சத்யன் மாஸ்டர் என்கிற மகாநடிகனின் உயிர் பிரிந்தது காட்டுத்தீ போல் பரவ ஒட்டுமொத்த மலையாள தேசமும் சோகத்தில் ஆழ்ந்தது.