பாக்ஸ் ஆபிஸ்: ரஜினிகாந்தின் கூலி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக புதிய சாதனைகள் பாக்ஸ் ஆபிஸில் உருவாகும்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து இருந்தனர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர். அப்படி இருந்த நிலையிலும் முதல் நான்கு நாட்கள் வசூலில் பட்டைய கிளப்பியது கூலி.
ஆனால், நான்கு நாட்களுக்கு பின் வசூலில் சரிவை சந்தித்தது. ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 505 கோடி வசூல் செய்துள்ளது. இது சற்று ஏமாற்றமாக இருந்தாலும், மூன்றாவது முறையாக மாபெரும் சாதனையை கூலி படத்தின் மூலம் ரஜினிகாந்த் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய இரு திரைப்படங்களும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது கூலி படமும் இணைந்துள்ளது. இதன்மூலம் மூன்று ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்களை கொடுத்த தமிழ் நடிகர் என்கிற சாதனையை ரஜினி செய்துள்ளார்.