சின்னச்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: கிருபா மீது மோதிய லாரி... அதிர்ச்சியில் உறைந்த இந்து! அடுத்து நடக்கப்போவது என்ன?
ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘சின்னச்சிறு கிளியே’. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், இன்றைய எபிசோடில் எதிர்பாராத விபத்தும், அடுத்தடுத்த அதிர்ச்சிகளும் நடக்கின்றன.

காரை ஓட்டுவது கிருபா எனத் தெரிந்த கர்ணா!
காரை ஓட்டி வருவது திவாகர் இல்லை, கிருபா என்ற உண்மை கர்ணாவுக்குத் தெரிய வருகிறது. இதனால் பதற்றமடையும் கர்ணா, உடனே பாண்டியிடம் விஷயத்தைச் சொல்கிறான். கிருபா என்றதும் பாண்டியும் அதிர்ச்சியடைகிறான். விபத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக லாரி டிரைவருக்கு பாண்டி போன் செய்கிறான். ஆனால், டிரைவர் போனை எடுக்காததால் இருவரும் பதற்றத்துடன் அங்கிருந்து கிளம்புகின்றனர். போகும் வழியிலும் பாண்டி மீண்டும் டிரைவருக்கு போன் செய்கிறான். இந்த முறை டிரைவர் போனை எடுத்தாலும், பாண்டி சொல்வது அவனுக்குச் சரியாகக் கேட்கவில்லை. இதற்கிடையில், லாரி வேகமாக வந்து கிருபாவின் கார் மீது மோதுகிறது. இதில் கிருபா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து காயமடைகிறான்.

சுகுணாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மறுபக்கம் வீட்டில் சுகுணா பேசிக்கொண்டிருக்கும்போது திடீரெனத் தண்ணீர்க் குழாய் உடைந்து தண்ணீர் வேகமாக வெளியேறுகிறது. இதில் அவளுடைய நெற்றியில் இருந்த குங்குமமும் அழிந்து போகிறது. இதைப் பார்த்ததும் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறதோ என்ற பதற்றம் ஏற்படுகிறது.

கர்ணாவின் நாடகத்தை நம்பிய கிருபா!
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்துக்கு கர்ணாவும் பாண்டியும் வந்து சேர்கிறார்கள். தங்களுடைய சதி வெளியே தெரியாமல் இருக்க, இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்பது போல இருவரும் நடிக்கிறார்கள். கர்ணா தன் மீது அக்கறை காட்டுவதாக நினைக்கும் கிருபா, "நீ இருக்கும்போது எனக்கு ஏதாவது ஆகிவிடுமா கர்ணா?" என்று நெகிழ்ச்சியுடன் கேட்கிறான். இதையடுத்து கிருபாவை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்துவின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட கிருபா!
மறுபக்கம் இந்துவும் சித்ராவும் சேர்ந்து இந்தத் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் விபத்தில் காயமடைந்த கிருபா வீட்டுக்கு வருகிறான். அவனைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்து என்ன நடந்தது என்று விசாரிக்கின்றனர். அப்போது கர்ணா, அந்தப் பெண்ணையும் அவளுடைய அப்பாவையும் வீட்டுக்கு அழைத்து வருகிறான். இதைப் பார்த்த இந்துவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்துவின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் கிருபா, நேரடியாகவே கல்யாண பெண்ணிடம் பேசுகிறான்.
"வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறாயா? திருமணம் முடியும்வரை நீ வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது. எங்கள் வீட்டிலேயேதான் இருக்க வேண்டும்" என்று கண்டிப்பாகச் சொல்லி விட இந்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.