ஜனநாயகன் படம் வெளிவருமா, இல்லையா? உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் உலகளவில் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளிவரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்து, படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில், இன்று (ஜனவரி 27)ஆம் தேதி உத்தரவு என கூறியிருந்தனர்.
அதன்படி, வெளிவந்துள்ள உத்தரவில், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்காக அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய்விட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது.