கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: கார்த்திக்கின் அதிரடிப் போராட்டம்... இதயத்தைக் காப்பாற்ற முடியுமா?
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், இந்த வாரம் கார்த்திக்குக்கு அடுத்தடுத்து சோதனைகள் காத்திருக்கின்றன. உயிரைக் காப்பாற்ற வேண்டிய இதயத்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க கார்த்திக் போராடும் பரபரப்பான காட்சிகள் திங்கட்கிழமை எபிசோடில் இடம்பெறுகின்றன.
இதயத்தைக் கடத்தும் ரவுடிகள்!
உயிரைக் காப்பாற்ற வேண்டிய இதயத்தை ஆம்புலன்ஸில் எடுத்துக் கொண்டு கார்த்திக் வேகமாகப் பயணம் செய்கிறார். அப்போது வழியில் குறுக்கிடும் ரவுடிகள், கார்த்திக்கைத் திசைதிருப்பி வண்டியை நிறுத்த வைக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்புலன்ஸில் இருந்த இதயத்தைத் திருடிக்கொண்டு தப்பித்து விடுகிறார்கள். கார்த்திக் அவர்களைத் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாமல் போகிறது.

இதயத்தை எரிக்கச் சொல்லும் சந்திரகலா!
இதயத்தைக் கடத்திய ரவுடிகள், சந்திரகலாவுக்குத் தகவல் சொல்கிறார்கள். கார்த்திக் சும்மா விடமாட்டான், எப்படியாவது இதயத்தைத் தேடி வந்து விடுவான் என்று நினைக்கும் சந்திரகலா, அந்த இதயத்தை உடனே எரித்துவிடச் சொல்லி அதிரடியாக உத்தரவிடுகிறார். ஆனால், வீட்டில் இருப்பவர்களோ இதைப் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் விளக்கு பூஜையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
செல்போன் கொடுக்கும் துப்பு... ரவுடிகளுடன் மோதும் கார்த்திக்!
இதற்கிடையில், ரவுடிகள் தப்பித்துச் சென்ற இடத்தில் அவர்கள் தவறவிட்ட செல்போன் கார்த்திக்கிற்குக் கிடைக்கிறது. உடனே மயில்வாகனத்துக்குப் போன் செய்யும் கார்த்திக், வீட்டில் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.

பிறகு காவல் ஆய்வாளரின் உதவியுடன் அந்த செல்போன் மூலம் ரவுடிகள் இருக்கும் குடோனைக் கண்டுபிடிக்கிறார். ரவுடிகள் இதயத்தை எரிக்கத் தயாராகும் நேரத்தில் அங்கே அதிரடியாக நுழையும் கார்த்திக், அவர்களுடன் சண்டை போட்டு இதயத்தை மீட்டு விடுகிறார். இதனால் சந்திரகலா கடும் கோபத்தில் இருக்கிறார்.
மருத்துவமனையில் அடுத்த சிக்கல்!
ஒருவழியாக இதயத்தை மீட்ட கார்த்திக், அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்படுகிறார். ஆனால், அங்கே அறுவை சிகிச்சை ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும், இன்னும் 30 நிமிடங்களுக்குள் இதயம் வந்து சேரவில்லை என்றால் உயிரைக் காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வழிமறிக்கும் ரவுடிகள்... கார்த்திக்கால் முடியுமா?
நேரத்துடன் போராடிக்கொண்டு கார்த்திக் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரவுடிகள் டிராக்டரையும் பெரிய டிரெய்லரையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வழியை அடைத்து விடுகிறார்கள். டிரைவரும் இல்லாததால் அந்த வாகனங்களை நகர்த்த முடியாமல் கார்த்திக் தவிக்கிறார். அதோடு, மேப்பிலும் மாற்றுப் பாதை எதுவும் கிடைக்கவில்லை.

ஒருபக்கம் இதயத்துக்காகக் காத்திருக்கும் உயிர்... மறுபக்கம் வழியை மறித்து நிற்கும் வாகனங்கள்... கையில் இருப்பதோ வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே! இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கார்த்திக் எப்படி மீண்டு வரப்போகிறார்? சரியான நேரத்தில் இதயத்தைக் கொண்டு சேர்த்து உயிரைக் காப்பாற்றுவாரா? அல்லது சந்திரகலாவின் சதியால் எல்லாமே கைமீறிப் போகுமா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.