கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரியைப் பழிவாங்க ஸ்ரேயா போட்ட மாஸ்டர் பிளான்... துப்பாக்கிச் சூட்டில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘கார்த்திகை தீபம்’. விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், சாமுண்டீஸ்வரியைப் பழிவாங்க சந்திரகலாவும் ஸ்ரேயாவும் சேர்ந்து பெரிய சதித் திட்டம் போட்டுள்ளனர். அதன்படி இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து பல அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கின்றன.

புல்லட்டை எடுத்துச் சென்ற முத்துவேல்... சந்தேகப்படும் ரேவதி!
எபிசோடின் ஆரம்பத்தில், யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வரும் முத்துவேல், அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். இதைப் பார்த்துவிடும் ரேவதி, உடனே வீட்டில் இருப்பவர்களை அழைத்து அந்த இடத்தைச் சோதனை செய்கிறார். ஆனால், அங்கே யாரும் இல்லாததால் குழப்பமடைகிறார். வீட்டில் ஏதாவது பொருள் காணாமல் போயிருக்கிறதா என்று தேடிப் பார்த்துவிட்டு, நடந்த விஷயத்தை கார்த்திக்கிற்குப் போன் செய்து சொல்கிறார். இதற்கிடையில், சந்திரகலா மற்றும் ஸ்ரேயாவைச் சந்திக்கும் முத்துவேல், புல்லட்டை யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டதாகச் சொல்கிறார். அப்போது ரேவதி தன்னைப் பார்த்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். இதனால் சந்திரகலா பதற்றமடைகிறார். ஆனால் ஸ்ரேயா மட்டும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும், சாமுண்டீஸ்வரியைச் சிக்க வைக்கத் தன்னிடம் ஒரு பெரிய திட்டம் இருப்பதாகவும் கூறுகிறார்.
கோயிலுக்கு வரவழைக்கப்பட்ட சாமுண்டீஸ்வரி... நடந்த துப்பாக்கிச் சூடு!
மறுநாள் காலையில் ரோகிணி கோயிலுக்குச் செல்கிறார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சந்திரகலாவும் ஸ்ரேயாவும், சாமுண்டீஸ்வரியை அங்கே வரவழைக்கத் திட்டம் போடுகின்றனர். அதன்படி சாமுண்டீஸ்வரியிடம் போன் செய்து, "உன்னுடைய மகள் ரோகிணி கர்ப்பமாக இருக்கிறாள். அவள் இப்போது கோயிலில்தான் இருக்கிறாள். அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் உடனே இங்கே வா" என்று மிரட்டுகின்றனர். இதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்குச் செல்லும் சாமுண்டீஸ்வரி, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கோயிலுக்குக் கிளம்புகிறார். இதற்கிடையில், விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் கார்த்திக்கும் அங்கே விரைகிறார். ஆனால், அவர் வருவதற்குள் கோயிலில் சாமுண்டீஸ்வரிக்கும் ஸ்ரேயா தரப்பினருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி, ஸ்ரேயாவைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்ததும் ஸ்ரேயா கீழே விழுகிறார். உடனே அவருடன் இருந்தவர்கள் ஸ்ரேயாவைத் தூக்கிக்கொண்டு காரில் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

ஸ்ரேயா இறந்துவிட்டதாக நாடகம்... சாமுண்டீஸ்வரிக்கு வைக்கப்பட்ட பொறி!
அந்த நேரத்தில் அங்கு வரும் கார்த்திக், "அத்தை, நீங்கள் இப்படி சுட்டிருக்கக் கூடாது" என்று கூறி சாமுண்டீஸ்வரியைச் சமாதானப்படுத்துகிறார். மேலும், நடந்த சம்பவத்தைப் போலீஸ் அதிகாரியிடம் சொல்லி உதவி கேட்பதுடன், ரேவதிக்கும் தகவல் தெரிவிக்கிறார். ஆனால், இங்கேதான் ஸ்ரேயா போட்ட திட்டத்தின் உண்மையான முகம் தெரிய வருகிறது. ஸ்ரேயா உண்மையில் சாகவில்லை. துப்பாக்கிக் குண்டு தன்னைத் தாக்காமல் இருக்க, முன்கூட்டியே புல்லட் ப்ரூஃப் வெஸ்ட் அணிந்திருக்கிறார். சாமுண்டீஸ்வரியை கொலைக் குற்றத்தில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, தன்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட வேறொரு பெண்ணுக்கு தனது உடைகளை அணிவித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
மருத்துவமனையில் அந்தப் பெண்ணைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் ஸ்ரேயா இறந்துவிட்டதாக நினைத்து அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இப்படி தன்னைப் போலவே இருக்கும் வேறொரு பெண்ணைப் பயன்படுத்தி சாமுண்டீஸ்வரியைப் பெரிய சிக்கலில் மாட்டிவிட்டார் ஸ்ரேயா. இந்தச் சதித் திட்டத்தில் இருந்து சாமுண்டீஸ்வரி எப்படி வெளியே வரப்போகிறார்? ஸ்ரேயா உயிருடன் இருப்பது எப்போது தெரியவரும்? கார்த்திக் செய்ப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.