திருமாங்கல்யம் எபிசோட் அப்டேட்: தல தீபாவளிக்கு வந்த அழைப்பு... அதிர்ச்சியில் மகா! திருவை கேள்வி கேட்கும் மனசாட்சி!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'திருமாங்கல்யம்'. இந்தத் தொடரில் மகா மற்றும் வருண் தல தீபாவளிக்காக ஊருக்குச் செல்லத் தயாராகி வருவது குடும்பத்தில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதேசமயம், மகாவை வருணுடன் அனுப்பிவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திரு தவித்து வருகிறான்.
தல தீபாவளிக்கு வந்த அழைப்பு... அதிர்ச்சியில் மகா!
மொட்டை மாடியில் மகா துணிகளைக் காயப் போட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது வருண் என்ன செய்கிறான் என்று புரியாமல் அவனைத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் போனில் பேசிக்கொண்டே அங்கு வரும் வருணிடம், யாருடன் பேசுகிறாய் என்று மகா கேட்கிறாள். அதற்கு அவன் பாட்டியுடன் பேசுவதாகச் சொல்கிறான்.
இதைக் கேட்டதும் பதறிப்போகும் மகா, உடனே போனை வாங்கிக் கேட்கிறாள். முதலில் தயங்கும் வருண், பிறகு போனை அவளிடம் கொடுக்கிறான். மறுமுனையில் பேசும் பாட்டி, தல தீபாவளி வருவதால் மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு உடனே ஊருக்கு வர வேண்டும் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட மகா அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். எப்படி ஊருக்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள். இதையெல்லாம் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த கிளி, உடனே வருணிடம் சென்று தல தீபாவளி அழைப்பு பற்றிப் போட்டுக் கொடுக்கிறான்.

லலிதாவின் மிரட்டல்... பயத்தில் உறைந்த மகா!
இதற்கிடையில், போனில் வரும் லலிதாவும் மகாவிடம், மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு ஒழுங்காக ஊருக்கு வந்து சேர வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறாள். ஏற்கனவே மகாவின் உண்மையான நிலை லலிதாவுக்குத் தெரிந்திருப்பதால், அவள் என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் இருக்கிறாள்.
தல தீபாவளிக்குக் கிளம்பும் மகா... அதிர்ச்சியில் திரு!
இந்தச் சூழலில் வீட்டின் வாசலில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெளியே வந்து பார்க்கின்றனர். அங்கே பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் வருண், தானும் மகாவும் தல தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்லப் போவதாக அறிவிக்கிறான்.
இதைக் கேட்டதும் திரு அதிர்ச்சியடைகிறான். ஆனால் தாத்தாவோ ரொம்ப சந்தோஷப்பட்டு, தாம்பூலத் தட்டில் புத்தாடை மற்றும் இனிப்புகளை வைத்து மகாவுக்கும் வருணுக்கும் கொடுத்து வாழ்த்துகிறார். திருவால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இதையடுத்து வருண் மகாவைத் தயாராகச் சொல்ல, அவளும் மாடிக்குச் சென்று பெட்டியை எடுத்து வருகிறாள். இதைப் பார்க்கும் காவேரியும் மயிலும், "யாரென்றே தெரியாத ஒருவனுடன் இவள் ஊருக்குக் கிளம்புகிறாளே" என்று பேசிக்கொண்டு மகாவைத் தடுக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் மகா, வேறு வழியில்லாமல் வருணின் காரில் ஏறி நல்லூருக்குப் புறப்படுகிறாள்.

திருவைக் கேள்வி கேட்கும் மனசாட்சி... குற்ற உணர்ச்சியில் தவிப்பு!
மகா ஊருக்குக் கிளம்பிய பிறகு திருவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதனால் தனது அறைக்குச் சென்று தனியாக உட்கார்ந்திருக்கிறான். அப்போது அவனுடைய மனசாட்சி அவன் முன்னால் தோன்றி சரமாரியாகக் கேள்வி கேட்கிறது.
"யாரென்றே தெரியாத ஒருவனுடன் மகாவை அனுப்பிவிட்டு இப்படி அமைதியாக இருக்கிறாயே? ஒருவேளை அவன் அந்தப் பெண்ணை வேறு எங்காவது அழைத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வாய்? உனக்குக் கொஞ்சம்கூட பயம் இல்லையா?" என்று கேட்டு திருவைத் துளைத்தெடுக்கிறது.
மனசாட்சியின் இந்தக் கேள்விகளைக் கேட்ட திரு, குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்கக் கூடாது என்று நினைத்து அடுத்து என்ன செய்வது எனத் தீவிரமாக யோசிக்கத் தொடங்குகிறான்.
மறுபக்கம், வருணுடன் காரில் நல்லூருக்குப் பயணம் செய்து கொண்டிருக்கும் மகா, அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்திலும் பதற்றத்திலும் இருக்கிறாள். ஊருக்குச் சென்ற பிறகு மகாவுக்கு என்ன பிரச்சினைகள் வரப்போகிறது? திரு அவளைப் பாதுகாக்க என்ன செய்ய போகிறான் என்பது குறித்து அறிய 'திருமாங்கல்யம்' தொடரை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.