துல்கர் சல்மானின் காந்தா பட ரிலீஸுக்கு வந்த சிக்கல்!! இதுதான் காரணம்?
காந்தா படம்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், ராணா டகுபதி உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்து வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் காந்தா. மறைந்த திரைக்கலைஞர் எம் கே தியாகராஜ பாகவதரின் கதையை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ளது காந்தா படம். 1950 காலக்கட்டத்தில் நடைபெறும் நடிகர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனையை மையமாகவும் கொண்டது இப்படம்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரது வரவேற்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இப்படம் வெளியாக 2 நாட்கள் இருக்கும் நிலையில் காந்தா படம் ரிலீஸாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு காரணம், எம் கே தியாராஜ பாகவதரின் பேரன் காந்தா படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தது தான். பாகவதரின் மகள் வழிப்பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுப்பெற்ற தியாகராஜன் தான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாகவதரின் பேரன் தியாகராஜன்
அந்த மனுவில், பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றியிருந்தாலும், அதனை மக்கள் நினைவுகூர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மைக்கு மாறாக பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கண்பார்வை இழந்து கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி கடனாளியாக இறந்ததாகவும் காட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் அவர் சொந்தமாக பங்களாவில் வாழ்ந்ததுடன், விலையுயர்ந்த கார்களை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எந்தவொரு கெட்டப்பழகமும் இல்லாத பாகவதரை அடிப்படை ஆதாரங்களின்றி அவதூறான முறையில் படத்தில் சித்தரித்ததாக காந்தா படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார் தியாகராஜன்.
இவ்வழக்கு சென்னை நகர ஏழாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், நவம்பர் 18 ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி படத்தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் சல்மானுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ள்து நீதிமன்றம்.
தியாராஜ பாகவதரின் பேரன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சிக்கலில் இருந்துவிடுபட்டு காந்தா படம் 14 ஆம் தேதி ரிலீஸாகுமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.